/தமிழ் வேதம்

தமிழ் வேதம்

அறம்:

அறம் செய்ய செய்ய அன்பு ஓங்கும்.  அன்பு ஓங்க அருள் கூடும்.  அருள் அன்பின் குழந்தைப் போல் அங்கே வந்து தழுவும்.  அருள் வருமானால் அது தவத்தில் கொண்டு சேர்க்கும்.   தவத்தில் உயிர் சேருமானால் அது உயிரை சிவத்தில் கொண்டு சேர்த்து விடும்.  சிவம் தான் அறவிடையின் மேல் எழுந்தருளுவதாயிற்றே!  அறமே வீட்டிற்கும் அடிப்படை ஆவது காண்க.  இதையே திருமூலரும் வலியுறுத்துகிறார்.

வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத்தகும் அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.

தருமம் என்ற வடசொல்லின் பொருள் அறம் என்ற தமிழ்ச் சொல்லின் ஒரு கூறுதான்.  முழுமையான இணை என்று கூறிவிட முடியாது. பிற மொழி வேதங்களில் இப்பகுப்பைக் காண இயலாது.

இரிக் வேதம்         –     துதிப்பாடல்கள்

யசூர் வேதம்          –     யாகம் செய்யும் செய்முறை

சாம வேதம்           –       யாகததில் பாடப் பெறும் இசையைக் கூறுவது

இவற்றிற்கும் அறத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை அறிஞர்கள் ஒப்புவர்.  இதையே புறநானூற்றில் காண்க.

சிறப்புடை மரபில் பொருளும் இன்பமும்
அறத்து வழிபடூஉம் தோற்றம் போல   – 31

  • அறத்தமிழ் வேதத் தொகுப்பே பதினொன் கீழ்க்கணக்கு நூல்கள் என்று ஆன்றோர்கள் காட்டி  அருளியுள்ளனர்.
  • வடமொழியில் தருமம் – வாழ்நெறியைக் குறித்தது. உதாரணம் – வருணாசிரம தருமம்.
  • அறம் ஒன்றல்ல 32 என்பது தமிழர் கண்டு காட்டியது.  அறம் என்ற சொல் அறவாழ்வு என்று வாழும் முறையைக் குறிப்பதானாலும் தனக்கு நன்மை என்பதே சமூகத்தில் பிறர்க்கு ஊறாக ஆகிவிடக்கூடாது என்று எண்ணி வாழ்வதே அறமாகும் (Ethics). தனது நன்மையை விட்டுக் கொடுத்து பிறர் நன்மையைப் போற்றி, இந்நெறி முறையில் சற்றும் பிறழாது நேரிய முறையில் வாழும் நெறியையே குறிக்கும்.  இதையே வாழ்வாங்கு வாழ்தல் என்று வள்ளுவர் காட்டினார்.
  • பணம் கொடுப்பது மட்டும் அறம் அல்ல. அதனால் தான் ‘அரசியல் பிழைத்தோர்க்கும் அறம் கூற்று ஆகும்’ என்றது  சிலப்பதிகாரம்.  போரிலேயே அறம் உண்டு.  அறப்போர் என்பர் வாழ்கின்ற துறைகள் அனைத்திலும் அறத்தை காட்டியவை அறநூல்கள்.

அறநூல்கள் எது ?

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும் பெயர் விளக்கம்:

நாம் பிறவிக்கு வருவது விடுமுதல், வாழ்க்கை என்பது வரவு.  வாழ்க்கையில் அறத்தொடு வாழச் செய்யும் முயற்சி செலவு;  செலவு போக நமக்குக் கிடைப்பது இலாபம்.  இதில் நிகரமாக நிற்கும் அறப்பயனே நமது இருப்பாகிய கீழ்க்கணக்கு.  அதனால் அறநூல்கள் கீழ்க் கணக்கு நூல்கள் எனப்பட்டன.  இதையே அப்பர் தம் தேவாரத்தில் ‘எழுதும் கீழ்க் கணக்கு இன்னம்பர் ஈசனே’.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எவைஎவை என்று பழம்பாடல் கூறுகிறது.

நாலடி நான்மணி, நால் நாற்பது ஐந்திணைமுப்
பால், கடுகம், கோவை, பழமொழி மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியுடன் ஏலாதி என்பனவே
கைந்நிலைய ஆம் கீழ்க் கணக்கு.

தமிழர்கள் தனித்தனிக் குடும்ப வாழ்விலே எவ்வளவு சிறந்திருந்தனர் என்பதற்கு அகப்பொருள் நூல்கள் சாட்சிகளாகும்.

  • தமிழர்கள் தனித்தனிக் குடும்ப வாழ்விலே எவ்வளவு சிறந்திருந்தனர் என்பதற்கு அகப்பொருள் நூல்கள் சாட்சிகளாகும்.
  • ஆன்மிகத் துறையிலும், அரசியல் துறையிலும், பிற துறைகளிலும் தமிழர்கள் எவ்வளவு உயர்ந்த முறையைப் பின்பற்றி வாழ்ந்தனர் என்பதற்கு புறப் பொருள் நூல்கள் சாட்சிகளாகும்.
  • தமிழர்களின் பண்பாட்டை அறிவதற்கு, நம்வாழ்க்கைக்கு வழி காட்ட இவை சிறந்த கருவிகளாகும்.
  • இவை யாவும் வெண்பாவினால் பாடப்பட்டவை காலம் கி.பி. 2-6.
  • இத்தொகுப்பில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மட்டுமின்றி இனம் பற்றி பிற்காலத்து நீதி நூல்களும் சேர்க்கப்பட்டன.
  • ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், கல்வி ஒழுக்கம், மூதுரை, நல்வழி, உலக நீதி, வெற்றி வேற்கை, நீதிநெறி விளக்கம், நன்னெறி, நீதிவெண்பா, அறநெறிச்சாரம் என்ற பிற ஆசிரியர்களின் நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
  • பொது வேதம் – மேற்கண்ட நூல்கள் பொது எனலாம்.         சிறப்பு வேதம் –  பன்னிரு திருமறை மற்றும் திவ்யப் பிரபந்தம் சிறப்பு எனலாம்.