/அறிமுகம்

அறிமுகம்

வேதம்:

ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு வேதம் உண்டு.  ஆரியர்களின் வேதம் ரிக், யஜூர், சாம, அதர்வனம். கிறித்துவர்களுடையது பைபிள். முஸ்லீம்களின் வேதம் குரான்.  புத்தர்களுடையது பிடகம்.  மனித இனத்தின் மூத்த குடியான தமிழினத்திற்கு மட்டும் வேதம் வேற்று மொழியில் இருக்குமா? இறை அருளால் மீட்டுத் தரப்பட்டதே பன்னிரு திருமுறையே தமிழ் வேதாகமம் என்க.

சம்பந்தர் உபநயன வரலாற்றுண்மை:

இறைவனால் அனுப்பப்பட்ட பல பெரியவர்களுள் ஒருவர் திருஞானசம்பந்தர்.  அவருக்கு உபநயனம் ஆகிறது. சுமார்த்த பிராமணர்கள் ஆரிய வேதம் ஓத முற்படுகின்றனர்.  ஞானசம்பந்தர் நிறுத்து என்றார்.  நிறுத்த வைத்து அவர்கட் பல வேதங்களைத் தமிழில் எடுத்துக் கூறினார்.  அவர் கூறியபடி உபநயனம் நடந்தது.  அவர்களும் கண்டும், கேட்டும் வியந்து அவரையே தியானப் பொருளாகக் கொண்டு உயர்ந்தனர் என்பது வரலாறு.

வேதம்:-   உலகியல் அறிவு நூல்

ஆகமம் – நிலையியல் இறை இன்ப நூல்

இந்த வேதமும் ஆகமமும் தமிழில் தான் உள்ளது.  வேறு எந்த மொழியிலும்    வேதம் என்பது பேசப்படுகிறதே ஒழிய ஆகமம் என்பது காணப்படுவதே இல்லை. இது தமிழின் உயிர் தனிச்சிறப்பே ஆகும்.   ஆகமச் சிந்தனை என்பது தமிழுக்கு மட்டுமே, தமிழ் மெய் அறிஞர்களுக்கு மட்டுமே உரியது, உணர்வாவது. இதையே திருவள்ளுவர் ‘மெய்யுணர்வு’ என்ற அதிகாரத்தில்  வைத்து உணர்த்தினார்.

வேதத்தின் மேற் சிந்தனையே ஆகமம் ஆகும்.  தமிழ் வேதத்தில் வே –   என்ற தன் வேர்ச்சொல் மூடி மறைத்தல் நூற்புற வேலி, வேய்தல், வீட்டுக்கூறை வேய்தல்.  எனவே எது எதுவெல்லாம் ஒரு காரணம் பற்றி மூடி மறைக்கப்படுகிறதோ அல்லது எது எதுவெல்லாம் மறைபொருளாக கிடைக்கின்றனவோ அவற்றை வேதம் என்றும் மறை என்றும் கூறினோம்.  இதுவே வடமொழியில் வேதம் என்று வித் – அறிவு என்பர்.  அறிவு நூல் என்பர்.  அது அறிவை விளக்குவதாகவே இருக்க வேண்டும் மறைக்கக் கூடாது.  ஆக நேர் எதிரான பொருளே அங்கு உள்ளது.  ஆக அவர்கள் வேதத்தை மறை என கூறக்கூடாது பொருள் வராது.  ஆனால் தமிழில் பொருந்த வருவது கண்கூடு, தெளிவாகிறது.

நாம் பார்க்கும் சுற்றுச் சூழல்களில் பல உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.  அவற்றை நாம் அனுபவத்தில் கண்டு தெளிகிறோம்.    இந்த உலகைப் படைத்த இறைவன் அந்த உலகிலுள்ள பல உண்மைகளை மறைத்து வைத்து அவற்றை அனுபவத்தால் ஆய்ந்தாய்ந்து கண்டு தெளிய என்று அமைத்திருக்கிறான்.  இது போன்று ஒன்றின் பலனை நாம் பெற வேண்டுமானால் அதன் பலனைப் பற்றிய அறிவை அப்பொருளின் உள்ளேயே இறைவன் மறைத்து வைத்தான்.  ஆய்ந்து, அனுபவித்து அறிந்துக் கொள் என்பது தான் இறைவனின் நோக்கம்.   உரியவர் மூலம் தூண்டப் பெற்றால் விளங்குவது.  இவ்வாறு காணப்படும் உலகில் காணப்படும் நியதி, காணப்படும் அன்டவெளியில் அன்டங்கள் சுழற்சி நிரல்பட நடைபெறும் நியதி ஆகும்.  இவைகளை எல்லாம் காணும் போது ஊகத்தால் இவற்றை எல்லாம் இயற்றுகிற ஒரு பெரிய சக்தி இறைவன் உண்டு என அறியலாம்.  அதனால் தான் உலகினை அடிப்படையாக வைத்து காணப்படாத இறைவனுக்கு உண்மை கூறி வாழ்த்து சொல்லுபவராய் திருவள்ளுவர் உலகின் மேல் வைத்து கடவுள் வாழ்த்து தொடங்கினார்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கண்ணில் காணும் உலகைப் பற்றிய அறிவே உலகினுள் மறைந்து கிடக்க அவற்றைத் துருவி    ஆராய வேண்டிய நிலை இருக்குமானால்,  கண்ணிற்கும் எண்ணிற்கும் அடங்காத இறைவனைப் பற்றிய அறிவு எவ்வளவு ஆழமாக இவ்வுலகு அடங்கிய இந்த அண்ட வெளியிலேயே மறைந்து இருக்க வேண்டும்.  இந்த இறைவனைப் பற்றிய ஆழந்து புதைந்து கிடைக்கின்ற அறிவை மறைத்துக் கூறிய மந்திரங்கள் அடங்கியவைத் தான் மறை என்றும் வேதம் என்றும் கூறப்பட்டது என்க.  அதனால் தான், நிறை மொழி மாந்தர் ஆணையிற்கிளர்ந்த ‘மறை மொழி தானே மந்திரம் என்ப’ என்று தொல்காப்பியம் கூறியது.

எனவே உலகியல் அறிவு அனுபவத்தில் அறிய மறைத்துச் சொல்லக் கூடியதும், அதே போல கடவுளியல் அறிவும் மறைத்துச் சொல்லப்படுவதும் என இரண்டுமே வேதம் எனப்படும்.  அதாவது உலகியல் கலைகள் எதுவானாலும், அதே மாதிரி வீடு பேற்றியல்களையும் என இரண்டுமே வேதம் எனப்படும்.  இந்தப் பொருளில் தான் தமிழ் வேதம் கொள்ளப்படுகிறது.  இவை அனைத்திற்கும் இடம் கொடுத்து நிற்கின்ற தூய தமிழ்ச் சொல்லே வேதம் என்பதை ஆய்ந்தறிக.  இத்தமிழ் வேதம் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்காகும்.

பன்னிரு திருமுறையில் வேதம் பற்றி சான்றாக 135 மேற்கோள்களைக் காணலாம்.  வேதத்தின் அடிப்படைக் கூறு அறம் என்று கொண்டது தமிழ் வேதம் ஒன்றே.